பைஅத் இஸ்லாத்தின் நுழைவாயில் : முன்னுரை Posted on : 2016-01-15 Print

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
 
மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்த உங்களது ரப்பைப் பயந்து கொள்ளுங்கள். அதிலிருந்து அதனது சோடியைப் படைத்தான். அந்த இருவரில் இருந்தும் அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்.
( 0 4 : 0 1 )
 
 
இந்தப் பூமியில் மனித இனத்தின் தோற்றம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து ஆரம்பமான மனித வரலாறு அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஊரிற்கும் அல்லாஹ் அனுப்பிக் கொண்டிருந்த தூதர்களின் வருகை நிறுத்தப் பட்டுள்ளது ஒன்றே மனித இனத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கப் போதுமானதாகும்.
 
 
முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாகவும், அல்லாஹ்வின் துதராகவும் இருந்ததனால் முழுஉலகிலும் அல்லாஹ் வின் சட்ட திட்டங்கள் மாத்திரமே நடைமுறையில் காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது எமது அறிவுக்கு எட்டியவரையில் உலகிலே அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் நிலைநாட்டப்படும் ஒரு நாடுகூட இல்லாத நிலை காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை நாம் எடுத்துப் பார்த்தால் இது அல்லாஹ்வின் ஒரு வழிமுறை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். அதாவது மனித சமூகம் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்: அவர்களை எச்சரித்து தனது கட்டுப்பாட்டின்பால் அழைக்கக்கூடிய தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். தூதர்களது அழைப்பை ஏற்று நேர்வழியை ஏற்றுக் கொண்டவர்களது தலைமுறையினர் மீண்டும் வழிகேட்டில் சென்று விடுகின்றனர். மிகமிக சிரமப்பட்டு நபிமார்களால் உருவாக்கப் படுகின்ற ஜமாஅதுல் முஸ்லிமீன் (இஸ்லாமிய சமுதாயம்) சிறிதுகாலம் சென்றதுமே அழிந்துபோய்விடுகின்றது.
 
 
மிகவும் சிரமப்பட்டுத் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீனை மிகவேகமாக அழிவுறச்செய்துவிட்டு, அதனை மீண்டும் தனது நல்லடியார்கள் தோற்றுவிப்பதன் மூலம், அவர்கள் உயர் பதவிகளை அடைந்துகொள்ள வேண்டும் என்பதையே அல்லாஹ் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றான். இதனைத்தான் பின்வரும் ஹதீஸ் மூலம் எமக்கு உணர்த்தப்படுகின்றது.
 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
 
இஸ்லாம் அறிமுகமற்றதாகவே ஆரம்பமானது. அது ஆரம்பித்தது போன்று அறிமுகமற்ற ஒன்றாகவே (அது) மாறும். (நேர்வழியைப் பின்பற்றும்) அந்த அறிமுகமற்றவர்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக!
(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஈமான் 65)
 
 
 
மிகப்பெரும் போரட்டம் நடத்தி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் எதிர்காலத்தில் அழிந்துவிடும் என்பதை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களே எங்களுக்குக் கூறிச் சென்றார்கள். உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப் பட்ட இஸ்லாமிய ஆட்சி பன்னிரண்டு தலைவர்கள் தோன்றும்வரை மாத்திரமே உறுதியானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
 
 
அழ்ழாஹ் இஸ்லாத்தை வஹிமூலம் மாத்திரமே இறுதித் தூதருக்கு இறக்கிவைத்தான். அந்த வஹியை இறுதி நாள்வரை பாதுகாப்பதாகவும் அவன் வாக்குறுதி அளித்துள்ளான். ஆனால் இன்று எமது சமூகத்தின் நிலை என்னவென்றால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்போது மக்களுக்குப் பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது. "அல்லாஹ் வஹிமூலம் அறிவித்த செய்திகள் மட்டும்தான் இஸ்லாம்" என்பதுகூட எமது சமூகத்தில் ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. அவ்வாறு கூறக்கூடியவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள்.
 
 
பருவ வயதை அடையும் ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத் திற்காக உடன்படிக்கை செய்வதன் மூலம் இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்று, முஸ்லிமாக வேண்டும் என்பதுகூட மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கின்றது.
 
 
அல்லாஹ் தனது தூதருக்கு வஹிமூலம் இறக்கிவைத்த இஸ்லாத்தை எவ்வித கூடுதல் குறைவும் இல்லாமல் மனித சமுதாயத்திற்கு எடுத்துக் கூறும் மிகச்சிறந்த ஆக்கப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஜமாஅதுல் "முஸ்லிமீன் பைஅத் இஸ்லாத்தின் நுழைவாயில்!" எனும் இந்த மிக முக்கியமான நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றது.
 
 
நீங்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சுவனத்தை அடைவதற்கான ஒரே வழியைத் தெளிவான ஆதாரங் களுடன் அடையாளம் காட்டும் இந்த நூலை நிதானமாக வாசித்து முழுப் பயனை அடைந்துகொள்ளுமாறு உங்களை அன்பாய் வேண்டுகின்றோம். இதில் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றுமானால் அதுபற்றி நீங்கள் தெளிவாக எங்களுக்கு எழுத்துமூலம் அறியத் தரலாம். எமக்குக் கிடைக்கப் பெறும் முக்கியமான சந்தேகங்களை ஒன்றுதிரட்டி அவற்றிற்கான ஆதாரங்களுடன் கூடிய பதிலை இன்ஷh அல்லாஹ் இந்த நூலின் அடுத்த பகுதியாக வெளியிடும் உத்தேசம் எங்களுக்கு இருக்கின்றது என்பதனையும் உங்களுக்கு அறியத் தருவதில் மகழ்ச்சியடைகின்றோம். நேர்வழியைத் தேடும் நல்ல உள்ளங்களுக்கு இந்த நூல் குன்றின் மேல் ஒளியாகத் திகழ வேண்டும் என வல்லவனை வேண்டி விடைபெறுகின்றோம்.
 
 
ஜமாஅதுல் முஸ்லிமீன் - இலங்கைக் கிளை
 
 
[இக்கட்டுறை "பைஅத்: இஸ்லாத்தின் நுழைவாயில்" எனும் புத்தகத்த்தில் இருந்து போடப்பட்டிருக்கிறது]