கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் பிரிவுகள் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தைக் குறித்து கூறப்பட வில்லை. அது மாற்று மதத்தவர்களைக் குறித்து கூறப்பட்டவைகளாகும். அதாவது யூத,
கிறிஸ்தவர்களைக் குறிக்கும் என்பது சரியா?
பதில் :
இஸ்லாம் என்ற பெயரில் மட்டும் வாழக்கூடிய சில உலமாக்கள் கேள்வி கேட்பவர்களுக்கும் உண்மையை எடுத்துச் சொன்னால் நாமும் அந்த வலைக்குள் விழுந்துவிடுவோம் என்ற அச்சத்தில் "அது இந்த உம்மத்தைப் பற்றி கூரபபட்டதல்ல; யூத, கிறிஸ்தவர்களைக் பற்றி கூறப்பட்டது" என்று தப்பி விடுகின்றனர்.
"எவர்களிடத்தில் மார்க்க அறிவுபற்றி கேட்கப்பட்டு, உண்மையைக் கூறாது யார் மறைத்து விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் நெருப்பினால் கடிவாளமிடப்படும்" என்ற நபிமொழியையும், "நாம் இறக்கி வைத்த தெளிவானவைகளையும் உணமையையும் யார் மறைக்கின்றார்களோ , அவர்களை அல்லாஹ்வும் சபிப்பவர்களும் சபிக்கின்றனர்"என்ற அல்குர்ஆன் வசனத்தையும் மறந்துவிடுகின்றனர்.
இதன் உண்மை யாதெனில் , நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னரே யூதர்கள் 71ஆகவும், கிறிஸ்தவர்கள் 72 ஆகவும் பிரிந்து இருந்தனர். 73 ஆகப் பிரியும் என்று கூறியது நபி (ஸல்) அவர்களுடைய இந்த உம்மத்தைச் சுட்டிக் காட்டியே. இதற்கு பின்வரும் ஆதாரங்களைக் கவனிக்கவும்.
01.எனது உம்மத் பிரியும் என்று சுட்டிக்காட்டக் கூடிய "உம்மத்தீ" என்ற வார்த்தையை நபி (ஸல்)
அவர்கள் பாவித்திருப்பது ஏனைய மதங்களைச் சுட்டிக் காட்டாது தனது உம்மத்தையே சுட்டிக் காட்டியுள்ளார்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.
02. யூத, கிறிஸ்தவர்கள் ஏற்கனவே பிரிந்துவிட்டார்கள். எனது உம்மத் பிற்காலத்தில் பிரியும் என்று காட்டக் கூடிய "சதப்தரிக்கு" ஆரம்ப எழுத்தாக வந்துள்ள 'ஸீன்' எனும் எழுத்துக் குறிக்கின்றது. உச்சரிப்பான 'ஸ' என்பது எதிர்க் காலத்தில் நடக்க விருக்கும் ஒரு நிகழ்வுக்கு பயன்படுத்தப்படும். எனவே நபியவர்களின் வபாத்திட்கு பிறகு அவர்களின் உம்மத்து பிரிவதையே இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றதே தவிர மாற்று மதத்தவர்களை அல்ல.
03. நபி (ஸல்) அவர்களின் உம்மத்து தான் 73 ஆகப் பிரியும்; மாற்று மதத்தவர்களோ, யூத கிறிஸ்தவர்களோ அல்ல என்பதை சுட்டிக் காட்டும் தெளிவான "நிச்சயாமாக இந்த மார்க்கம் 73 ஆகப் பிரியும்" என்ற வாசகத்தை பயன்படுத்தி மாற்றுக் கருத்துக் கொடுக்க இடமில்லாது ஆக்கிவிட்டார்கள்.
ஆகவே ஏற்கனவே பிரிந்தவர்கலியோ அல்லது வேறு மதத்தவர்கலையோ நபியவர்கள் கூறவில்லை. தங்களை ஏற்றுக் கொண்ட இஸ்லாமியர்களே இப்படி பிரிவார்கள் என்றுதான் கூறியுள்ளார்கள். இதையே நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம் .